வரவேற்பு வளைவு வைக்கும் பிரச்சினை: மக்கள் போராட்டம் நடத்த திரண்டதால் பரபரப்பு

நாகர்கோவிலில் வரவேற்பு வளைவு வைக்கும் பிரச்சினையில் மக்கள் போராட்டம் நடத்த திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-31 23:00 GMT
நாகர்கோவில்,


நாகர்கோவில் பட்டகசாலியன்விளை சந்திப்பில் வரவேற்பு வளைவு வைப்பது தொடர்பாக பட்டகசாலியன்விளை மக்களுக்கும், கலைநகர் மக்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பட்டகசாலியன்விளை சந்திப்பில் வரவேற்பு வளைவு வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் 2 ஊர் மக்களும் புகார் அளிப்பதற்காக கோட்டார் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அப்போது அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இந்த நிலையில் பட்டகசாலியன்விளை சந்திப்பில் நேற்று காலை 2 ஊர் மக்களும் போராட்டம் நடத்த திரண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.


பின்னர் 2 ஊர் மக்களிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட இடத்தில் ஏற்கனவே கூறியதுபோல வரவேற்பு வளைவு வைக்க கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனால் 2 ஊர் எல்லைகளையும் சரியாக வரையறுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

உடனே இந்த கோரிக்கை நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது எல்லையை வரையறுப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறினார். ஆனால் அதுவரையும் சம்பந்தப்பட்ட இடத்தில் எந்த ஒரு வரவேற்பு வளைவும் வைக்க கூடாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து 2 ஊர் மக்களும் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்