ஒரே ஆண்டில் செம்மரக்கடத்தல் ஏஜெண்டுகள் 25 பேர் கைது வேலூர் சரக டி.ஐ.ஜி. பேட்டி
2018-ம் ஆண்டில் மட்டும் செம்மரக்கடத்தல் ஏஜெண்டுகள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வேலூர் சரக டி.ஐ.ஜி.வனிதா தெரிவித்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் வேலூர் மாவட்ட போலீசாரின் 2018-ம் ஆண்டின் சாதனைகள் குறித்து நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் 2018-ம் ஆண்டில் மொத்தம் 31 ஆயிரத்து 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 582 வழக்குகள் சொத்து பிரச்சினை தொடர்பானது ஆகும். இதில் 530 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு 81 சதவீத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கூட்டுக் கொள்ளை, வழிப்பறி, கொள்ளை தொடர்பான சம்பவங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.50 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பொருட்களில், சிறப்பு புலனாய்வு துறை மூலம் விசாரணை நடத்தி சென்னை மற்றும் பல இடங்களில் ரூ.45 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மோசடி வழக்குகள் சம்பந்தமாக 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 71 கொலை வழக்குகளில் 69 வழக்கில் துப்பு துலக்கப்பட்டு அவற்றில் 13 வழக்குகளில் சம்பந்தபட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை தொடர்பாக மொத்தம் 96 பேர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது. இந்த வழக்குகளில் 16 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார வழக்குகளில் 3 வழக்குகளுக்கு கோர்ட்டு மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் சாலை விபத்து தொடர்பாக மொத்தம் 2 ஆயிரத்து 588 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 474 வழக்குகள் சாலை விபத்தில் மரணம் தொடர்பானவையாகும். பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டை விட 2018-ம் ஆண்டில் விபத்து 21 சதவீதமாக குறைந்துள்ளது. விபத்தினால் மரணம் ஏற்படும் வழக்குகளும் குறைந்துள்ளது.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 3 லட்சத்து 18 ஆயிரத்து 724 சிறு, சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் ரூ.3 கோடியே 75 லட்சம் அபராதம் வசூலிக்கபட்டுள்ளது. மேலும், 37 ஆயிரத்து 112 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ரத்து செய்யபட்டுள்ளது.
குற்ற செயல்களினால் பாதிக்கப்பட்ட 245 நபர்களுக்கு நிவாரண தொகைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதில் 26 நபர்களுக்கு நிவாரண தொகையான ரூ.45 லட்சம் நீதிமன்றம் மூலம் பெற்றுத்தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் நோக்கத்தோடு இதுவரை 2 ஆயிரத்து 108 கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் தமிழக போலீஸ் துறை இயக்குனர் அறிவுரைப்படி போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து செம்மரம் கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இது தொடர்பாக 35 ஏஜெண்டுகள் அடையாளம் காணப்பட்டு, 25 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 10 பேரை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தலைமையில் தனிப்படை அமைத்துள்ளோம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமுனாமரத்தூர் மற்றும் மலைக்கிராமங்களில் பொதுமக்களிடம் செம்மரக்கடத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் செம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் கிடைத்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் உள்பட போலீஸ் அதிகாரிகள் இருந்தனர்.