வாழப்பாடி அருகே, கார் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி மகன், மகள் படுகாயம்

வாழப்பாடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி கார் மோதி பலியானார். அவருடன் சென்ற மகன், மகள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-12-31 22:00 GMT
வாழப்பாடி, 

இந்த விபத்து குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:- வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தவர் ராஜா(வயது 37), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி விமலா (28). இவர்களுக்கு ஏழுமலை (9) என்ற மகனும், புவனேஸ்வரி(8) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ராஜா, தனது மகன் ஏழுமலை, மகள் புவனேஸ்வரி ஆகிய இருவரையும் பள்ளத்தாதனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்கள் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

வாழப்பாடி அருகே பாட்டப்பன் கோவில் பகுதியில் வந்த போது, பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ராஜா உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் கொண்டு வரப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா இறந்தார். அதே நேரத்தில் படுகாயம் அடைந்த ஏழுமலை, புவனேஸ்வரி ஆகிய இருவரும் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து விமலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்