மண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பதால் மீன்வளம் குறையும் அபாயம்; அதிகாரிகள் அலட்சியம்

மீன்வளத்துறையினரின் அலட்சியத்தால் மண்டபம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சிலர் மீன்பிடிப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாரம்பரிய மீனவர் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-12-30 23:29 GMT

பனைக்குளம்,

மண்டபம் பகுதியில் அதிகமான விசைப்படகுகளும், 500–க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன. இந்த நாட்டுப்படகு மீனவர்கள் தினமும் கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் மட்டும் சென்று சிறிய வகை மீன்களை பிடித்து வருவது வழக்கம். ஆனால் விசைப்படகுகள் மீன்வளத்துறையினரின் அனுமதி பெற்று நீண்ட தூரம் சென்று விலை உயர்ந்த இறால், கனவாய், நண்டு, வாவல், சீலா, பாறை போன்ற மீன்களை பிடித்து வருவார்கள்.

இந்த நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட ரெட்டை மடி, சுருக்கு மடி போன்ற வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்து வருவதால் நாட்டுப்படகு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மீன்வளம் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மண்டபம் பாரம்பரிய மீனவ தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் சகுபர் அலி, செயலாளர் முஜிபுர் ரகுமான், பொருளாளர் அன்வர்அலி ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– மண்டபம் பகுதியில் சில விசைப்படகுகளில் அரசால் தடை செய்யப்பட்ட ரெட்டை மடி, சுருக்குமடி போன்ற வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர்.

இதன் மூலம் மீன் குஞ்சுகள் அழிக்கப்பட்டு விடுவதால் கடலுக்குள் மீன்வளம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. இதுகுறித்து மீன்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற மீன்பிடிப்பு காரணமாக நாட்டுப்படகு மீனவர்கள் மீன்கள் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் கரை திரும்புகின்றனர்.

எனவே நாட்டுப்படகு மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு ரெட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும், மீன்வளத்தை பாதிக்கக்கூடிய வலையை பயன்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்