குற்றாலம் அருவியில் குளிக்கும் பகுதியில் புகுந்த மலைப்பாம்பு - பெண்கள் அலறி அடித்து ஓட்டம்
குற்றாலம் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் மலைப்பாம்பு புகுந்ததால் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் விழுகிறது. இதனால் இங்கு ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது.
குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் ஏராளமானோர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் ஊர்ந்து வந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், மலைப்பாம்பை லாவகமாக பிடித்து குற்றாலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அந்த மலைப்பாம்பு 12 அடி நீளம் உடையதாக இருந்தது. அதை வனத்துறையினர் பத்திரமாக வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.