உளுந்தூர்பேட்டை அருகே, மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே டி.வி.பார்த்ததை தாயார் கண்டித்ததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விபரீத சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விழுப்புரம்,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கொணலவாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி சிவரஞ்சனி. இவர்களுடைய மகள் மகேஸ்வரி(வயது 15). இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது தாயார் சிவரஞ்சனி, ஏன் படிக்காமல் டி.வி. பார்த்து கொண்டிருக்கிறாய்? என மகேஸ்வரியை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மகேஸ்வரி நேற்று காலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். தொடர்ந்து மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.