அதிகாரிகளின் பணிகளை முதல்–அமைச்சர் தடுக்கிறார்; கவர்னர் குற்றச்சாட்டு
அதிகாரிகளின் பணிகளை முதல்–அமைச்சர் தடுத்து வருகிறார் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் பேட்டியளிக்கும்போது, அரசு அதிகாரிகளுக்கு தேர்வு வைக்கும் அதிகாரத்தை கவர்னருக்கு யார் கொடுத்தது? என்றும், கவர்னரின் செயலகம் என்பது அங்கீகரிக்கப்படாதது? என்றும் கூறியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடியின் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கவர்னரின் செயலகம் அரசுத்துறை செயலாளர், தலைவர்களிடம் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பயிற்சிகளை அளிக்கவேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த புத்தாக்க பயிற்சிகள் பொதுப்பணியில் இன்றியமையாததாகும். அதன் அடிப்படையிலேயே தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
புதுவை அரசமைப்பு விதிகளின்படி கவர்னர் அலுவலகம் என்பது நிர்வாகியின் செயலகம்தான். இதற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
முதல்–அமைச்சர் தொடர்ந்து கவர்னரின் அலுவலகத்தை விமர்சிப்பதை விட்டுவிட்டு பொதுமக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது, சட்டம் ஒழுங்கை அமல்படுத்துவது, வள ஆதாரங்களை திரட்டுவது, பொதுத்துறை நிறுவனங்களை சீரமைப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
கவர்னரின் அலுவலகத்தை பாராட்டாவிட்டாலும் அயராது விமர்சிப்பதை கைவிடவேண்டும். முதல்–அமைச்சர் அதிகாரிகள் தங்கள் பணிகளை செய்வதை ஒவ்வொரு முறையில் தடுத்து வருகிறார். அதற்கு 2 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்பதை அமல்படுத்த வேண்டாம் என்று கூறியதை உதாரணமாக கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.