மணப்பாடு கடற்கரையில் மணல் திட்டுகளால் மீனவர்கள் அவதி தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை

மணப்பாடு கடற்கரையில் மணல் திட்டுகளால் மீனவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு தூண்டில் வளைவு அமைக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-12-30 19:09 GMT
உடன்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரை பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கடற்கரையாகும். இயற்கையாக அமைந்துள்ள உயரமான மணல் குன்று கடல் வழி பயணிகளுக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கம், சவேரியார் வாழ்ந்த குகை, நாழிக்கிணறு கடற்கரையில் குடிநீர் கிணறுகள், ஆண்டு தோறும் கடல் விளையாட்டுகள் ஆகிய சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வரும் ஒரு சுற்றுலா தலமாகும். இப்படிப்பட்ட கடற்கரையில் இயற்கையாக உருவாகும் மணல் திட்டுகளால் இங்குள்ள மீனவர்கள் சிரமப்படுகிறார்கள். கடற்கரைக்கு படகுகளை கொண்டு வந்து மீன்களை இறக்கவும், பின்பு மீன்பிடிக்க கடலுக்கு செல்லவும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மீனவர்கள் அவதிப்படுகிறார்கள்.

கடற்கரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீளமாக உருவாகும் மணல் திட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மீனவர்கள் தங்கள் சொந்த செலவில் எந்திரங்கள் மூலம் மணல் திட்டுகளை அடிக்கடி அப்புறப்படுத்துகின்றனர். இந்த மணல் திட்டுகள் நிரந்தரமாக உருவாகாமல் தடுப்பதற்கு ஒரே வழி தூண்டில் வளைவு அமைப்பது தான். எனவே அரசு விரைவில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்