கும்பகோணம் அருகே கோவிலில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிய 2 பேர் கைது

கும்பகோணம் அருகே கோவிலில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-30 22:15 GMT
கும்பகோணம்,

திருவாரூர் மாவட்டம் கூவனூரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் திருவாரூர் தனிப்படை போலீசார் அவரை நீடாமங்கலம் அருகே கைது செய்தனர். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், நாட்டு வெடிகுண்டுகளை, கும்பகோணம் பகுதியை சேர்ந்த 2 பேரிடம் கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ராஜ்குமார் கூறிய 2 பேர் யார்? என்பது தொடர்பான விசாரணையை தொடங்கினர்.

இதில் அவர்கள் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் முகுந்தநல்லூர் கருவதோப்பு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் வினோத் (வயது24), நடுத்தெருவை சேர்ந்த துரை மகன் கிருஷ்ணமுர்த்தி(30) ஆகியோரிடம் ராஜ்குமார், நாட்டு வெடிகுண்டுகளை கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. இந்த தகவலை பட்டீஸ்வரம் போலீசாரிடம், திருவாரூர் தனிப்படை போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பட்டீஸ்வரம் போலீசார் வினோத், கிருஷ்ணமுர்த்தி ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முகுந்தநல்லூரில் உள்ள ராஜஅய்யனார் கோவில் வளாகத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் எதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்தனர்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்