தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுடன் சந்திப்பு: அமெரிக்க வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை சந்தித்த அமெரிக்க வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அதே நேரத்தில் ஆலை தரப்பினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு எதிர்ப்பு இயக்கத்தினர் ஆலைக்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா ஓக்லாந்து பகுதியைச் சேர்ந்த மார்க் சியல்லா (வயது 35) என்பவர் கடந்த 27-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்தார். அவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார். மேலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் சிலரை நேரில் சென்று சந்தித்து உள்ளார். அதே போன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராமங்களுக்கும் மார்க் சியல்லா சென்று மக்களை சந்தித்து பேசி உள்ளார். அவரை தூத்துக்குடியை சேர்ந்த பிரின்ஸ் என்பவர் அழைத்து சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு போலீசார் தூத்துக்குடியில் மார்க் சியல்லா தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதேபோன்று பிரின்சையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தெற்கு பீச் ரோட்டில் பனிமயமாதா ஆலயம் அருகே திரண்டனர். அவர்கள் அங்கு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரணைக்கு பிறகு பிரின்சை விடுவித்தனர். அதன்பிறகு எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக முன்னாள் பேராசிரியை பாத்திமா பாபு கூறுகையில், ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை சேர்ந்த பிரின்ஸ் ஆலையின் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். அவரை போலீசார் அழைத்து சென்று உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக தொடர்ந்து போலீசார் தொந்தரவு கொடுத்து வருகின்றனர்‘ என்றார்.
போலீசார் விடுவித்த பிரின்ஸ் கூறுகையில், ‘ஒரு பத்திரிகையாளர் வந்தார். அவருக்கு தமிழ் தெரியாது. இதனால் அவருக்கு மொழி பெயர்ப்புக்காக நான் உடன் சென்றேன். அவர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ஒருவரையும், பண்டாரம்பட்டியில் உள்ள சிலரையும் சந்தித்தார். பின்னர் அங்கு உள்ள பாழடைந்த கிணற்றையும், அந்த பகுதியில் உள்ள தண்ணீரையும் படம் பிடித்தார். பின்னர் அவரை அழைத்து வந்து சாப்பிட்டுவிட்டு ஓட்டலில் விட்டு விட்டு வந்தேன். இரவில் வந்து போலீசார் என்னை அழைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்‘ என்றார்.
இந்த நிலையில் நேற்று காலையில் மார்க் சியல்லா விசாரணைக்காக தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் போலீசார் மார்க் சியல்லாவிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நேற்று மாலை வரை நீடித்தது.
விசாரணையின் போது, மார்க் சியல்லா, அமெரிக்காவில் நிறுவனம் சாரா செய்தியாளராக (பிரீ லான்சர்) இருப்பதாகவும், ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக செய்தி சேகரிக்க வந்ததாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார், அவருடைய மடிக்கணினி, கேமரா உள்ளிட்டவற்றையும் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கூறும்போது, மார்க் சியல்லா சுற்றுலா விசாவில் வந்து உள்ளார். இவர் செய்தியாளராக பணி செய்வதாக தெரிவித்து உள்ளார். அவர் தெரிவித்த தகவல் உண்மையா? என்பதை அறிய குடியுரிமை பிரிவில் தகவல்களை கேட்டு உள்ளோம் என்று கூறினார்.