ஏரியில் மண் அள்ள சென்ற மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம கும்பல்

விழுப்புரம் அருகே ஏரியில் மண் அள்ள சென்ற மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-30 22:15 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே கெடார் கிராமத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஷ், பிரகாஷ், ஏழுமலை, சுப்பிரமணி. மாட்டு வண்டி தொழிலாளர்கள். இவர்கள் 5 பேரும் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அருகில் உள்ள வீரமூர் ஏரிக்கு மண் அள்ள தங்களது மாட்டு வண்டிகளில் சென்றனர். அப்போது மாட்டு வண்டிகளை ஏரிக்குள் ஓட்டிச்செல்லும்போது அங்கு கார் ஒன்று வந்தது. காரை பார்த்ததும் போலீசார் தான் வருகிறார்கள் என்று நினைத்த 5 பேரும் மாட்டுவண்டிகளை முட்புதர்களுக்குள் ஓட்டிச்சென்று மறைந்தனர். அப்போது மர்மநபர்கள், மாட்டு வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியை நோக்கி விளக்கு ஒளிபடும்படியாக காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்து இறங்கி மாட்டு வண்டிகளை நோக்கி துப்பாக்கியால் 5 முறை சுட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

மர்மநபர்கள் சுட்டதில் கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமான ஒரு மாட்டின் வாய் பகுதியில் குண்டு பாய்ந்ததில் நாக்கு துண்டானது. மேலும் மாட்டு வண்டிகளில் குண்டு பாய்ந்து துளை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் அங்கிருந்து கெடாருக்கு சென்று நடந்த சம்பவம் பற்றி கிராம மக்களிடம் கூறினர். மேலும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே குண்டு காயம் அடைந்த மாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்து குண்டு வெளியில் எடுக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகளுடன் நேற்று காலை 6 மணிக்கு கெடார் பஸ் நிறுத்தம் அருகே விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் திரண்டனர். பின்னர் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினி மற்றும் கெடார் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் கிராம மக்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே தகவல் அறிந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் வாகனத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு துப்பாக்கியால் சுட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த மாட்டின் வாய் பகுதியில் இருந்து குண்டு எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு முடிந்தவுடன் வரும் அறிக்கையை வைத்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவம் நடைபெற்ற வீரமூர் ஏரி மற்றும் காயமடைந்த மாட்டையும் பார்வையிட்டார். 

மேலும் செய்திகள்