விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

விடுமுறை நாளையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2018-12-30 22:30 GMT

பென்னாகரம்,

சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கர்நாடகா மற்றும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

இந்தநிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் வழக்கமான வாரவிடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் பரிசலில் சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. மேலும் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. முதலைப்பண்ணை, மீன் அருங்காட்சியகம், தொங்கு பாலம், நடைபாதை, பஸ் நிலையம், பார்வை கோபுரம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதனால் அருவி மற்றும் நடைபாதை, காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டையொட்டி ஒகேனக்கல்லுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகள்