கர்ப்பிணி தற்கொலை வழக்கில் கணவர் உள்பட 3 பேர் கைது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கர்ப்பிணி தற்கொலை வழக்கில் கணவர் உள்பட 3 பேர் கைது செய்தனர்.
வரதராஜன்பேட்டை,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமம், மேலத்தெருவை சேர்ந்தவர் கனகசபை. இவரது மகள் ரஞ்சிதா(வயது 24). இவருக்கும், கடலூர் மாவட்டம் கொண்ட சமுத்திரம் கிராமத்தில் உள்ள அசோக்குமார் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தற்போது கர்ப்பிணியாக இருந்த ரஞ்சிதா சம்பவத்தன்று சூரப்பள்ளத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் இருந்தபோது அப்பகுதியில் முந்திரி தோப்பில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ரஞ்சிதாவிற்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் இதுகுறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி விசாரணை நடத்தினார்.
விசாரணையில், வரதட்சணை கொடுமையால் தான் ரஞ்சிதா தற்கொலை செய்து கொண்டார் என தெரிந்தது. இதையடுத்து அவரது கணவர் அசோக்குமார், மாமனார் பாபு, மாமியார் அன்பழகி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.