புனேயில் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் சிக்கினார்

புனேயில் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-30 00:05 GMT
புனே,

புனே மாவட்டம் முல்ஷி தாலுகா பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு சொந்தமாக லாவசா ரோட்டில் உள்ள நிலத்திற்கு பட்டா கேட்டு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை தாசில்தார் சச்சின் டோங்கரே என்பவர் பரிசீலனை செய்தார்.

அப்போது அவர் பட்டா வழங்கவேண்டும் என்றால் தனக்கு ரூ.1 கோடி லஞ்சம் தரவேண்டும் என கூறினார். இதற்கு அந்த நபர் பணம் தருவதாக கூறி விட்டு அங்கிருந்து வந்துவிட்டார்.

பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் சம்பவம் குறித்து புனே மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த யோசனையின்படி, நேற்று அவர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று சச்சின் டோங்கரேவை சந்தித்து ரூ.1 கோடியை கொடுத்து உள்ளார். அப்போது அந்த பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தாசில்தார் வீட்டில் சோதனை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரூ.1 கோடி லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்