பெலகாவி கூட்டத்தொடருக்கான செலவில் பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு: சட்டசபை செயலாளர் பணி இடைநீக்கம்

பெலகாவி கூட்டத்தொடருக்கான செலவில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சட்டசபை செயலாளரை பணி இடைநீக்கம் செய்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2018-12-29 23:42 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் பெலகாவியில் உள்ள சுவர்ணசவுதாவில் நடைபெறுவது வழக்கம். பெலகாவியில் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில், கர்நாடக அரசு இயந்திரம் பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு மாற்றப்படும். பெலகாவியிலேயே எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். இதற்கான செலவுகளை சட்டசபை செயலாளரான எஸ்.மூர்த்தி கவனித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2016-17-ம் ஆண்டில் பெலகாவி சுவர்ணசவுதாவில் நடந்த கூட்டத்தொடருக்காக செலவு செய்யப்பட்ட தொகையில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்த ஊழலில் சட்டசபை செயலாளர் எஸ்.மூர்த்திக்கு தொடர்பு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதையடுத்து, இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சியான பா.ஜனதா கோரிக்கை வைத்தது. அதைத்தொடர்ந்து, சட்டசபை செயலாளர் எஸ்.மூர்த்தி மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க அரசு அதிகாரியான சிவருத்ரப்பா தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் விசாரணை அறிக்கையை உடனடியாக அரசிடம் தாக்கல் செய்யவும்அந்த குழுவினருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், அந்த குழுவினர் சட்டசபை செயலாளர் எஸ்.மூர்த்தி மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், விசாரணை அறிக்கையை சபாநாயகர் ரமேஷ்குமார் மற்றும் தலைமை செயலாளர் விஜய பாஸ்கரிடம், அதிகாரி சிவருத்ரப்பா வழங்கியுள்ளார். அதில் 2016-17-ம் ஆண்டில் நடந்த கூட்டத்தொடருக்கான ஆன செலவு தொகை குறித்து எஸ்.மூர்த்தி அரசிடம் வழங்கிய கணக்கு விபரங்களுக்கும், சிவருத்ரப்பா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி அளித்துள்ள அறிக்கையிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சட்டசபை செயலாளர் எஸ்.மூர்த்தியை பணி இடைநீக்கம் செய்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

ஊழலில் ஈடுபட்ட சட்டசபை செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தன் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டை எஸ்.மூர்த்தி முற்றிலும் மறுத்து விட்டார்.

இதுகுறித்து எஸ்.மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், நான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. எந்த தவறும் செய்யவில்லை. என் மீது பொய் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. நான் ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக சரியான தகவல்களை விசாரணை குழுவினர் அரசிடம் வழங்கவில்லை. மேல் நோட்டமாக ஊழல் நடந்திருப்பதாக மட்டுமே கூறியுள்ளனர். நான் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவன் என்பதால் என் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.

எனது பணிக்காலம் இன்னும் 10 ஆண்டுகள் உள்ளன. சட்டசபை செயலாளர் பதவிக்கு ஏராளமான அதிகாரிகளிடையே போட்டி ஏற்பட்டது. அவர்களது சூழ்ச்சியால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். என் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன். நான் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன், என்றார்.

மேலும் செய்திகள்