தஞ்சை அருகே கரும்பு ஏற்றிய டிராக்டர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் மறியல் - 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தஞ்சை அருகே கரும்பு ஏற்றிய டிராக்டர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-29 23:11 GMT
தஞ்சாவூர் ,

தஞ்சையை அடுத்துள்ள குருங்குளம் பகுதியில் அமைந்து உள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. அரசுக்கு சொந்தமான இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் அரவை தொடங்கும். கடந்த சில ஆண்டுகளாக நவம்பர் மாதம் இறுதியில் அரவைப்பருவம் தொடங்கியது.

இந்த ஆண்டு அரவைப்பருவம் கடந்த 25-ந் தேதி மிகவும் காலதாமதமாக தொடங்கியது. இதனால் சர்க்கரை கட்டுமான திறன் குறைவதுடன், ஆலையில் கரும்பு பதிவு குறைந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறி விவசாயிகள் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அறிஞர் அண்ணா கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் ராமநாதன், செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் அர்ச்சுணன் ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் குருங்குளம் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜனனி சவுந்தர்யா சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து அறிஞர் அண்ணா கரும்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் தாமதமாக கடந்த 25-ந் தேதி தான் அரவைப் பருவத்தை தொடங்கினர். இதுவரை வெறும் 50 டன் மட்டுமே அரவை செய்யப் பட்டுள்ளது. இந்த ஆலை தொடங்கி 44 ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஆலையில் உள்ள பழமையான எந்திரங்கள் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று தெரிவித்து புதிய எந்திரங்கள் மாற்றப்பட்டது. ஆனால் புதிய எந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இவ்வாறு பழுதடைவதால் கரும்பு வெட்டப்பட்டு டன் கணக்கில் ஆலையின் முன்பு டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் தேங்கி நிற்கிறது.

இதனால் குறிப்பிட்ட காலத்தில் கரும்பை வெட்ட முடியவில்லை. காலதாமதமாக கரும்பு வெட்டுவதால் கரும்பு பிழிதிறன் குறைந்து விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆலையில் கரும்பு பதிவு குறைந்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் கரும்பை வெட்டி அரைத்தால்தான் அதில் இருந்து கிடைக்கும் பணத்தை கொண்டு கரும்பு விவசாயிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியும். ஏற்கனவே அரசு கரும்பு விவசாயிகளுக்கு போதுமான ஊக்கத்தொகை வழங்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதால் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறோம். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் முறையாக கரும்பு அரவையை தொடங்க வேண்டும்”என்றார்.

மேலும் செய்திகள்