நாகையில் போலீஸ் வாகனங்களை தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆய்வு

நாகையில், போலீஸ் வாகனங்கள் மற்றும் தளவாட பொருட்களை தஞ்சை சரக டி.ஐ.ஜி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-12-29 23:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் அனைத்து சிறப்பு பிரிவுகள் மற்றும் சீர்காழி போலீஸ் நிலையத்தையும் 2018-ம் ஆண்டிற்கான வருடாந்திர ஆய்வினை தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக நாகை ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் அரசால் வழங்கப்பட்ட தளவாட பொருட்களையும், போலீஸ் வாகனங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், கட்டாயம் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். போலீஸ் கார்கள் ஓட்டும் டிரைவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.வாகன பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உள்பட போலீசார் பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் அலுவல் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது குற்றபதிவேடுகள், நிலுவையில் உள்ள வழக்குகள், கைது செய்யப்படாத குற்றவாளிகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்த டி.ஐ.ஜி. லோகநாதன், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அறிவுறுத்தினார். பின்னர் டி.ஐ.ஜி. லோகநாதன், நிருபர்களிடம் கூறுகையில், நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணல் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் துறையில் காலி பணியிடங்களில் பயிற்சி முடித்து வரும் போலீசாரை தேவைகேற்ப பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. சீர்காழி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அப்போது சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்