திருச்சி அருகே கார் கண்ணாடியை உடைத்து திருடப்பட்ட தொழில் அதிபரின் துப்பாக்கி, தோட்டாக்கள், மடிக்கணினி பறிமுதல் - 2 பேருக்கு வலைவீச்சு

திருச்சி அருகே கார் கண்ணாடியை உடைத்து திருடப்பட்ட தொழில் அதிபரின் துப்பாக்கி, தோட்டாக்கள், மடிக்கணினியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-12-29 23:15 GMT
திருச்சி,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கீழகொற்கை பட்டீஸ்வரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் நடையழகன் (வயது 62). தொழில் அதிபரான இவர் கும்பகோணத்தில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருடைய உறவினர் திருச்சியை சேர்ந்த பிருந்தா. இவருக்கும் அதே கியாஸ் நிறுவனத்தில் ஏஜென்சி வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து கியாஸ் குடோன் அமைக்க இடம் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாலை நடையழகன் சொகுசு காரில் திருச்சி வந்தார். திருச்சி-மதுரை மெயின்ரோட்டில் மணிகண்டம் அருகே பாகனூரில் இடம் பார்த்தனர்.

பின்னர் பஞ்சப்பூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்திவிட்டு ஓட்டலுக்குள் சென்று புரோக்கருடன் பேசி கொண்டு இருந்தனர். அந்தசமயம் நடையழகன் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் சிலர் காரில் இருந்த கைத்துப்பாக்கி, 19 தோட்டாக்கள், ஐபேடு, மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்றனர். சிறிதுநேரம் கழித்து நடையழகன் காரை எடுக்க வந்தார். அப்போது கண்ணாடி உடைக்கப்பட்டு துப்பாக்கி மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல், சப்-இன்ஸ்பெக்டர் முருகைய்யன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கார் கண்ணாடியை உடைத்து கைவரிசை காட்டியது ராம்ஜிநகர் மில்காலனியை சேர்ந்த சுதன் என்கிற சுந்தர்ராஜ் மற்றும் அவரது நண்பர் என்பது தெரியவந்தது. உடனே சுதனை பிடிக்க போலீசார் ராம்ஜிநகருக்கு சென்றனர். ஆனால் போலீசார் வருவதை அறிந்த அவர் அங்கிருந்து தப்பி விட்டார். இதையடுத்து சுதனின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கு காரில் இருந்து திருடப்பட்ட மடிக்கணினி, ஐபேடு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சுதன் வீட்டு அருகே பாழடைந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு துப்பாக்கி மற்றும் 19 தோட்டாக்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள சுதன் மற்றும் அவரது நண்பரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்