சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து ஊழியர் வீட்டில் நகை திருடிய நண்பர் கைது

சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து ஊழியர் வீட்டில் நகை திருடிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-29 22:30 GMT
சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் அருகே உள்ள சென்னிகுளத்தை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 45) பஞ்சாயத்து ஊழியர். சிவகிரியை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (வயது 39) கொத்தனார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இதனால் கருத்தப்பாண்டி அடிக்கடி சிவஞானத்தின் வீட்டிற்கு சென்று வருவார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிவஞானம் வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி ஞானவள்ளி வீட்டில் குழந்தைகளை விட்டு விட்டு அருகே உள்ள கடைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 11 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.

இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் மூலம் விசாரணை நடத்தினர். அதில் சிவஞானத்தின் வீட்டிற்கு கருத்தப்பாண்டி வந்ததாக அவருடைய செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே போலீசார் கரிவலம்வந்தநல்லூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கருத்தப்பாண்டியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிவஞானம் வீட்டில் புகுந்து 11 பவுன் நகையை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கருத்தப்பாண்டி வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்