உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து - வெளிநடப்பு செய்த விவசாயிகள்
உயர்அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளி நடப்பு செய்தனர். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பி.ஏ.பி.பல்லடம் வட்ட பாசனசபை விவசாயி கோபால் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பூர்,
தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 12 நாட்களாக திருப்பூர் வே.கள்ளிபாளையம் பகுதியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சிலர் தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 4 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் இடத்தில் கலெக்டர் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து இதுவரை கேட்கவில்லை. மாவட்ட நிர்வாகம் எங்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாமலே இருந்து வருகிறது. இது மிகவும் வருத்தப்படும் வகையில் அமைந்துள்ளது. இதனால் நாங்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசும்போது கூறியதாவது, உங்கள் போராட்டத்தின் ஒவ்வொரு நிலையையும் கண்காணித்து வருகிறோம். மருத்துவ உதவி தொடர்பாக அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரையும் செய்து வருகிறோம். இதனால் தற்போது விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து பேசுங்கள் என்று கூறினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த விவசாயி கோபால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெரும்பாலானோர் இதே கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்ட அரங்கில் குறைந்த அளவு விவசாயிகளே இருந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். அங்கிருந்து வெளியேறிய விவசாயிகள் அனைவரும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் வெளியே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக விவசாய நிலங்கள் வழியே உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.