பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க ரமேஷ் ஜார்கிகோளி முயற்சி

டெல்லியில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க ரமேஷ் ஜார்கிகோளி முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2018-12-28 23:42 GMT
பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் கடந்த 22-ந் தேதி நடைபெற்றது. மந்திரிசபையில் இருந்து 2 பேர் நீக்கப்பட்டனர். புதிதாக 8 மந்திரிகள் பதவி ஏற்றனர். மந்திரி பதவியை பறித்ததால், ரமேஷ் ஜார்கிகோளி கடும் அதிருப்தியில் உள்ளார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் கூட்டிய கூட்டத்திற்கு வரும்படி ரமேஷ் ஜார்கிகோளிக்கு சித்தராமையா அழைப்பு விடுத்தார். அவர் அதை புறக்கணித்துவிட்டு, பெலகாவிக்கு சென்றார். அதன் பிறகு அவர் தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டார்.

ரமேஷ் ஜார்கிகோளியை சமாதானப்படுத்தும் பணி அவரது சகோதரரும், மந்திரியுமான சதீஸ் ஜார்கிகோளியிடம் வழங்கப்பட்டுள்ளது. ரமேஷ் ஜார்கிகோளியை தொடர்புகொள்ள முடியவில்லை என்று சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.

இந்த நிலையில் ரமேஷ் ஜார்கிகோளி, பெலகாவியில் இருந்து மும்பைக்கு சென்று, அங்கிருந்து டெல்லிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்திக்க அவர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவும் நேற்று டெல்லி சென்றார். அங்கு கட்சியின் மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில் எடியூரப்பா கலந்து கொண்டார். எடியூரப்பாவும், ரமேஷ் ஜார்கிகோளியும் டெல்லியில் உள்ளனர். இதனால் ரமேஷ் ஜார்கிகோளி அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்