பொள்ளாச்சி அருகே பெரும்பதியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடக்கம் - மிரட்டி கையெழுத்து வாங்கியதாக விவசாயிகள் புகார்
பொள்ளாச்சி அருகே பெரும்பதியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. மிரட்டி கையெழுத்து வாங்கியதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி,
புகலூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்சூருக்கு உயர்மின் கோபுரம் அமைக்கப்படுகின்றது. பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை பகுதிகளில் விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பதியில் போலீஸ் பாதுகாப்புடன் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.
பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. அப்போது அங்கு வந்த விவசாயிகள் பணிகளை தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் செல்வபாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதை தொடர்ந்து விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கி கொண்டு பணிகளை மீண்டும் தொடங்கினார்கள். இது குறித்து விவசாயிகள் கூறிய தாவது:-
பெரும்பதி பகுதியில் 12 விவசாயிகளின் தோட்டத்தில் 11 உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றது. ஆனால் பணிகளை தொடங்குவது தொடர்பாக எந்தவித முன் அறிவிப்பும் எங்களுக்கு கொடுக்கவில்லை. இன்று (நேற்று) திடீரென்று பொக் லைன் எந்திரத்துடன் வந்து குழி தோண்ட வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு ஏற்கனவே தபால் அனுப்பியதாக தெரிவித்தனர். ஆனால் மாலை 3 மணிக்கு பிறகு தான் தபால் கிடைத்தது. அதில் 22-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தபால் அனுப்பி உள்ளனர். தபால் நிலையத்தில் 26-ந்தேதி சீல் வைக்கப்பட்டு இன்று மாலை வந்து கொடுத்தனர். தபால் கிடைத்த 15 நாட்கள் காலஅவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் ஒரு வாரம் தான் கேட்டோம். அதையும் அவர்கள் கொடுக்க முடியாது என்றும், நீங்கள் கையெழுத்து போடவில்லை என்றாலும் பணிகள் கண்டிப்பாக நடைபெறும். பணிகள் நடைபெறுவதை தடுக்க நினைத்தால் கைது செய்வோம் என்று மிரட்டி கையெழுத்து வாங்கி விட்டனர். உயர்மின் கோபுரம் அமைக்கப்பட உள்ள நிலங்களில் தக்காளி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.