காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-28 22:15 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் ராஜா.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஆறுமுகம், பொருளாளர் செந்தில்குமார், மாநில துணை செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறுகையில், “18 ஆண்டுகளாக நாங்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இந்த நிலையில் கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டதால் மின்சீரமைப்பு பணிகளில் ஈடுபடுமாறு அமைச்சர் அழைப்பு விடுத்ததை ஏற்று நாங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிகளில் ஈடுபட்டோம். இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக மின்துறை அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் நாங்கள் கடந்த 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 35 நாட்களாக இரவு, பகல் பாராதது நாங்கள் பணியில் ஈடுபட்டோம். ஆனால் எங்களை பற்றி கண்டுகொள்ளாமல் மின்வாரிய அதிகாரிகளை மட்டும் பாராட்டி பேசியது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வருகிற 2-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்”என்றார்.

மேலும் செய்திகள்