பயிர் இழப்பீட்டு தொகை வழங்க தாமதம் ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
பயிர்இழப்பீட்டு தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வீரராகவராவ் எச்சரிக்கை விடுத்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, விவசாய இணை இயக்குனர் சுசீலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக்அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் தங்களுக்கு கடந்த 2016-17-ம் ஆண்டுக்கு பலருக்கு பயிர் இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்றும், 2017-18-ம் ஆண்டுக்கு முழுவதுமாக கிடைக்கவில்லை என்றும் காப்பீட்டு நிறுவனத்தினரும், மாவட்ட நிர்வாகமும் தங்களை ஏமாற்றி வருவதாக கூறி கோஷமிட்டனர்.
மேலும் காப்பீட்டு நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திற்கு பொய்யான தகவல்களை தெரிவித்து காலம்தாழ்த்தி வருவதாகவும், இதனால் தாங்கள் விவசாயம் செய்ய வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை என்றும், இந்த ஆண்டு விவசாயத்திற்கு மேலும் கடன் வாங்கி விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருவதாகவும் கூறி கோஷமிட்டபடி கலெக்டரை முற்றுகையிட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் கலந்து கொண்ட துணை மேலாளர் லெட்சுமணன் கூறியதாவது:- 2016-17-ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு தொகையில் சிலரின் வங்கி கணக்கு வேறுபாடாக உள்ளதால் அவர்களுக்கு மட்டும் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டிற்கான காப்பீடு செய்ததில் சில இடங்களில் கூடுதலாக பயிர்காப்பீடு செய்துள்ளதால் மறுகணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளதால் அந்த பணி முடிந்ததும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை கேட்ட விவசாயிகள் மறுகணக்கீடு என்பது உடனடியாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும், தற்போது அடுத்த விவசாய பணி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் எதை வைத்து மறுகணக்கீடு செய்வீர்கள், இது விவசாயிகளை ஏமாற்றும் வேலை. கூடுதலாக ஒரு நாள் பயிர்காப்பீடு செய்ய காலம் வழங்க மறுக்கப்படுகிறது. எங்களின் பணத்தினை மட்டும் எதன் அடிப்படையில் இத்தனை நாள் வழங்காமல் வைத்துள்ளர்கள். இதற்கு வட்டியோடு தர வேண்டும். இனியும் உங்களை நம்ப தயாராக இல்லை. விவசாயிகள் ஒன்று சேர்ந்து சென்னை வந்து அதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் அதற்கு முன்னரே வழங்கிவிடுங்கள் என்று ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:- மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை வஞ்சிக்கவில்லை. விவசாயிகளுக்கு நிவாரண தொகை கிடைக்க வேண்டும் என்பதில் முழு அக்கறையுடன் செயல்பட்டு தினமும் தொடர்பு கொண்டு பேசிவருகிறோம். காப்பீடு தொகை வழங்காததால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளர்கள் என்பதை நன்றாக உணர்ந்துள்ளோம். உங்களின் தொகை மட்டுமல்ல மத்திய-மாநில அரசுகளின் பங்குத்தொகையும் செலுத்தப்பட்டுஉள்ளது. இதனால் காப்பீட்டு நிறுவனத்தை கேட்பதில் முழு உரிமை உள்ளது.
இனியும் மாவட்ட நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது. 2016-17-ம் ஆண்டிற்கு விடுபட்டவர்களுக்கு வங்கி கணக்கினை சரிபார்க்க சிறப்பு முகாம் நடத்தப்படும். அதில் கலந்து கொண்டு சரிபார்த்து பொங்கல் பண்டிகைக்குள் அதற்கான தொகையை வழங்க வேண்டும்.
அதேபோல, 2017-18-ம் ஆண்டிற்கான தொகையை அடுத்த கூட்டத்திற்குள் வழங்க வேண்டும். இவை இரண்டையும் செய்யாவிட்டால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விவசாயிகளுக்காக காப்பீட்டு நிறுவனம் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காமல் தாமதமாக வழங்கினாலும் வழக்கு தொடரப்படும்.
எனவே, இதுதான் காப்பீட்டு நிறுவனத்திற்கு கடைசி எச்சரிக்கை. இதிலும் செய்யதவறினால் காப்பீடு தொகையை வட்டியுடன் வாங்குவதோடு, விவசாயிகளுக்கான தாமதம், மனஉளைச்சல் என அனைத்திற்கும் கணக்குபோட்டு வசூலிக்க நடவடிக்கை எடுக்கபடும். இவ்வாறு பேசினார். கடைசியாக காலஅவகாசம் வழங்கி அதற்குள் பணம் தராவிட்டால் தங்களுக்காக கலெக்டர் வழக்கு தொடர்ந்து பணம் பெற்றுத்தருவதாக கண்டிப்பான உத்தரவிட்டதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து நம்பிக்கையுடன் கலைந்து சென்றனர்.