கோர்ட்டு அவமதிப்பு வழக்கு அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேருக்கு ஒருநாள் சிறை தண்டனை

ராமநாதபுரத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேருக்கு ஒருநாள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2018-12-28 22:15 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்தவர் வேலு என்பவரின் மகன் மணிகண்டன்(வயது40). அ.தி.மு.க. பிரமுகர். இதேபோல, ராமநாதபுரம் கம்பர் தெருவை சேர்ந்தவர் செல்லபாஸ்கரசாமிதாஸ் மகன் ராஜேஸ்வரன்(61). இவர்கள் மீது ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்-1 கோர்ட்டில் காசோலை தொடர்பான தனித்தனி வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கு விசாரணைக்காக இவர்கள் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி ஆஜராகவில்லை. பின்னர் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

இதன்காரணமாக ஏன் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்று விளக்கம்கேட்டு கோர்ட்டு சார்பில் கடிதம் அனுப்பியபோது அதனை பெற்றுக்கொள்ளாமல் இருந்துகொண்டு கோர்ட்டு அவமதிப்பு செய்தார்களாம். இதுதொடர்பாக கோர்ட்டு உதவியாளர் முருகன் தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி இசக்கியப்பன் மேற்கண்ட இருவருக்கும் கோர்ட்டு களையும் வரை ஒருநாள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், அவர், தற்போது கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் அவை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன.

இவ்வாறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதால் ஏராளமான வழக்குகளை முடிக்க முடியாமல் உள்ளது. இதனால் 174(2) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முதல்முறை என்பதால் எச்சரிக்கை விடுக்கும் வகையில் 6 மாதம் சிறைதண்டனை வழங்க வழி இருந்தாலும் குறைந்தபட்சமாக ஒருநாள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் அனைத்து வழக்குகளிலும் வழக்கு விசாரணைக்கு சம்மன் அனுப்பி, பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு ஆஜராகாமல் இருந்தால் 6 மாதம் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்