மத்திய மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 5 லட்சம் இறால் குஞ்சுகள் பாம்பன் கடலில் விடப்பட்டன - மீனவர்கள் மகிழ்ச்சி

இறால் உற்பத்தியை பெருக்க மத்திய மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 5 லட்சம் குஞ்சுகள் பாம்பன் பகுதி கடலில் விடப்பட்டன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2018-12-28 22:30 GMT
ராமேசுவரம், 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் கடல் வளத்தை பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் இறால், நண்டு உள்பட பல வகையான மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து கடந்த 5 ஆண்டுகளாக மண்டபம் முதல் ராமேசுவரம் வரையிலான கடல் பகுதியில் விட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாம்பன் குந்துகால் பகுதியில் நேற்று மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. ஆராய்ச்சி நிலைய பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆராய்ச்சி நிலைய டாக்டர்கள் சரவணன், சங்கர் மற்றும் நிரபராதி மீனவர் சங்க கூட்டமைப்பு தலைவர் யு.அருளானந்தம், குந்துகால் நாட்டுப்படகு மீனவர் சங்க பிரதிநிதி இன்னாசி உள்பட பலர் மீன்பிடி நாட்டுப்படகில் சென்று சுமார் 5 லட்சம் இறால் குஞ்சுகளை கடலில் விட்டனர்.

இதுபற்றி ஆராய்ச்சி நிலைய பொறுப்பாளர் ஜெயக்குமார் கூறியதாவது:-

கடல் வளத்தை பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் ஆண்டுதோறும் இறால், நண்டு மற்றும் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டு வருகின்றன. அதன்படி பாம்பன் குந்துகால் பகுதியில் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 5 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. மீனவர்களிடம் இருந்து தாய் இறால் மீன்களை வாங்கி அதனை ஆராய்ச்சி நிலைய தொட்டியில் பாதுகாப்பாக பராமரித்து அதில் இருந்து வரும் குஞ்சுகளை பத்திரமாக கடந்த 2 மாதங்களாக வளர்த்து வந்தோம்.

இந்த குஞ்சுகள் 6 மாதத்தில் பெரிய இறால் மீன்களாக வளர்ந்து விடும். இந்த நிதியாண்டு முடிவுக்குள் 30 லட்சம் இறால் குஞ்சுகளை கடலில் விட திட்டமிட்டுளோம். கடந்த 5 ஆண்டுகளில் 65 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்கள் இறால் மீன்களை பிடிப்பதற்காகவே அதிகஅளவில் செல்வதால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற இறால் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு கடலில் விடப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். ராமேசுவரம் கடல் பகுதியில் 5 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்த மீனவர்கள் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்