கரூர் பசுபதீஸ்வரர் கோவில் இடம் ஆக்கிரமிப்பு: கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்ததால் பரபரப்பு பதற்றம்-போலீஸ் குவிப்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

Update: 2018-12-28 23:00 GMT
கரூர், 

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. இதனை அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு மற்றும் திருத்தொண்டர் சபையினர் கோவில் நிர்வாகத்துடன் இணைந்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கரூர் வருவாய்த்துறை ஆவணங்களின் படி அந்த கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் எங்கெங்கு உள்ளன? யாருடைய பராமரிப்பில் இருக்கிறது? என்பது குறித்து ஆய்வு செய்து சரிபார்த்தனர். இந்தநிலையில் நீண்ட நாட்களாக பசுபதீஸ்வரர் கோவிலின் தெற்குமட வளாகம், லாரி மேடு, ஆஸ்பத்திரி ரோடு உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துக்கள் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு நடந்து வந்தது. இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றை காலி செய்து விட்டு பசுபதீஸ்வரர் கோவில் நிர்வாகத்திடம் சொத்துக்களை ஒப்படைக்குமாறு 7 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும் அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த இடங்களில் நோட்டீசு ஒட்டி விட்டு சென்றனர்.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சொத்துக்களை ஒப்படைக்கவில்லை எனில் கோவில் நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.மேலும் செலவு தொகைக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களை தொகுத்து பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டோர் நல அமைப்பு என உருவாக்கி, அரசு பத்திரப் பதிவு விதிப்படி தான் பதிவு செய்து நீண்ட நாட்களாக குடியிருக்கிறோம். திடீரென வந்து வெளியேற சொன்னால் எங்கே செல்வது? என கூறி சம்பந்தப்பட்ட நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளால் வழங்கப்பட்ட பட்டாக்களின் மீது ரத்து நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தநிலையில் கோவில் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பான காலக்கெடு முடிந்ததால், இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் கல்யாணி, பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ராசாராம் உள்ளிட்ட அதிகாரிகள் பசுபதீஸ்வரர் கோவில் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர் கரூர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசினர். இதற்கிடையே ஆக்கிரமிப்பை விரைவில் அகற்ற வேண்டும் என கூறி சிவனடியார்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்களும், மற்றொருபுறம் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கால அவகாசம் கேட்டு சம்பந்தப்பட்ட நபர்களும் திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அறநிலையத்துறையினர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை எடுத்து கொண்டு தெற்குமட வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சம்பந்தப்பட்ட நபர்களிடம் கோர்ட்டு நடவடிக்கை குறித்தும், பின்னர் இடத்தை காலி செய்து விட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறும் கேட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற பலத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் அதிகாரிகள் அங்குள்ள வீடு, கடைகளுக்கு சென்று விவரத்தை எடுத்து கூறிவிட்டு வந்தனர். அப்போது இதுதொடர்பாக பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலரிடம் நிருபர்கள் கேட்ட போது, கோவிலை சுற்றியுள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட வீடு,கடைகளுக்கு விரைவில் சீல் வைப்போம் என்றார்.

அதனைதொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் கல்யாணி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வீடு, கடைகளில் உள்ள பொருட்களை வெளியே எடுத்து காலி செய்யுமாறு கூறினர். அப்போது திடீரென போக சொன்னால் எங்கே செல்வது? சட்டரீதியாக வழக்கை நாங்கள் சந்திப்போம் என்று சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அங்கிருந்த ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் கடையிலிருந்து பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன. அந்த கடையின் கதவினை இழுத்து பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் வீடு, கடைகளுக்கு சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அப்போது மதுரை ஐகோர்ட்டு கிளையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கூடாது என ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம். அதன் விசாரணை வருகிற 3-ந்தேதி நடக்கிறது. அதுவரை ஆக்கிரமிப்பு அகற்றுவது தவறு என கூறி அதிகாரிகளிடம் சிலர் மனு கொடுத்தனர். மேலும் சிலர் இதுதொடர்பாக கல்யாண பசுபதீஸ்வர சாமியிடம் முறையிட போகிறோம் என கூறி சிறிது நேரம் போராட்டம் நடத்தி விட்டு, கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்