திண்டிவனம் அருகே பரிதாபம் ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி

திண்டிவனம் அருகே ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழந்தனர். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2018-12-28 22:45 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 40). இவரது மனைவி முருகவேணி(30). இவர்களுக்கு பிரவீன்குமார்(14), பிரசாந்த்(11), பிரதாப்(9) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் பிரவீன்குமார் மரக்காணத்தில் உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறான். பிரசாந்த் ஆவணிப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பும், பிரதாப் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். குமார் சென்னையில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். முருகவேணி தனது 2-வது மகன் பிரசாந்த், 3-வது மகன் பிரதாப்புடன் சேந்தமங்கலத்தில் வசித்து வந்தார்.

முருகவேணி தினந்தோறும் விவசாய கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.அப்போது தனது பசுமாடுகளை அதேஊரில் உள்ள ஏரி பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு மாலை பணி முடிந்து வரும்போது வீட்டுக்கு ஓட்டி வருவார்.

அதன்படி நேற்று முன்தினம் காலை முருகவேணி பசுமாடுகளுடன் ஏரிபகுதிக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த பிரசாந்த், பிரதாப் ஆகியோர் மாடுகளுக்கு காவலாக இருப்பதாக கூறி முருகவேணியுடன் ஏரி பகுதிக்கு சென்றனர். பின்னர் முருகவேணி மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வயல் வேலைக்கு சென்றார். பின்னர் அவர் மாலை 4.30 மணியளவில் மாடுகளை ஓட்டிச் செல்ல வந்தபோது அவரது மகன்களை காணவில்லை. பின்னர் அவர் மாடுகளை வீட்டுக்கு ஓட்டி வந்தபோது, அங்கும் மகன்கள் இருவரும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகவேணி தனது உறவினர்களுடன், பல இடங்களில் தேடிபார்த்தும் மகன்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி முருகவேணி குமாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவரும் சொந்த ஊருக்கு விரைந்து வந்து பல்வேறு இடங்களில் தேடினார். இருப்பினும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து குமார் மாயமான தனது மகன்கள் 2 பேரையும் கண்டுபிடித்து தரக்கோரி ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான 2 பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சேந்தமங்கலம் ஏரியில் பிரசாந்த், பிரதாப் ஆகியோர் பிணமாக மிதந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக வருவாய்த்துறையினருக்கும், ஒலக்கூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திண்டிவனம் தாசில்தார் பிரபு வெங்கடேஸ்வரன் மற்றும் ஒலக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவர்கள் 2 பேரின் உடல்களையும் ஏரியில் இருந்து மீட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாடுகளுக்கு காவலாக இருக்க வந்த சிறுவர்கள் 2 பேரும் குளிப்பதற்காக ஏரியில் இறங்கியபோது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதற்கிடையே சம்பவத்தை அறிந்து ஏரிக்கு வந்த குமார், முருகவேணி, பிரவீன்குமார் மற்றும் உறவினர்கள் ஏரியில் மூழ்கி பலியான பிரசாந்த், பிரதாப் ஆகியோரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து பிரசாந்த் மற்றும் பிரதாப் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன்-தம்பி ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்