சாத்தூர் கர்ப்பிணிக்கு ஏற்றிய எச்.ஐ.வி. ரத்தம்: சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் குழு 7 மணி நேரம் விசாரணை

சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம் தொடர்பாக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் குழு நேற்று அதிரடி விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-28 22:00 GMT
சிவகாசி,


விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது, சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ரத்தம் பெற்று ஏற்றப்பட்டது. அது எச்.ஐ.வி. கிருமி தொற்றுள்ள ரத்தம் என்பதால், அந்த கர்ப்பிணியும் எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக சிவகாசி ரத்த வங்கியில் பணியாற்றிய 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 5 பேர் குழுவினர் நேற்று காலை 10 மணிக்கு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் தீக்காய சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள தனி அறையில் விசாரணையை தொடங்கினர்.

சுகாதார துறை கூடுதல் இயக்குனர் மாதவி தலைமையில் சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியர் ரகுநந்தனன், டாக்டர் யுபேரிஷியா லதா, நெல்லை மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியை மணிமாலா, சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியை சுவசந்திரன் ஹம்சவர்தினி ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

அவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர், ரத்த வங்கி பொறுப்பாளர் மற்றும் ஊழியர்கள் என 10-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட வாலிபர் ரத்ததானம் கொடுத்த போது, ரத்தவங்கி மற்றும் ஆஸ்பத்திரியில் கையாளப்பட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அதில் உள்ள விவரங்களை குறித்துக்கொண்டனர்.

அந்த ரத்தத்தை செலுத்தியதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சாத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் அந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசாரும் தங்களுக்கு தேவையான விவரங்களை சேகரிக்க சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். அங்குள்ள டாக்டர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக சில ஆவணங்களை கேட்டு பெற்றனர். இந்த விசாரணையால் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியின் தீக்காய சிகிச்சை பிரிவு நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

5 பேர் குழு விசாரணை நடந்த போது அங்கு வந்த விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மனோகரன் கூறியதாவது:-

சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 3 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் 2 பேர் சம்மனை பெற்றுள்ளனர். ஒருவர் வீட்டில் இல்லாததால், அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டு உள்ளது.

இதுவரை நான் நடத்திய விசாரணை குறித்த தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளேன். தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் விசாரணைக்குழு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சுமார் 5 மணிநேரம் விசாரணை மேற்கொண்டது.

மேலும் செய்திகள்