நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் 19-வது நாளாக நீடிப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது
நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களின் வேலைநிறுத்த போராட்டம் 19-வது நாளாக நீடித்தது.
நாமக்கல்,
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரே அரசாணையின் மூலம் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு முழு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று 19-வது நாளாக நாமக்கல் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் தாசில்தார் அலுவலக நுழைவு வாயில் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். வட்ட தலைவர்கள் செந்தில்கண்ணன், வருதராஜ், அன்புராஜ், சேந்தமங்கலம் வட்ட செயலாளர் சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
முடிவில் வட்ட பொருளாளர் ராமன் நன்றி கூறினார்.