கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள், வக்கீல்கள் பயன்பாட்டிற்கு வழக்குப்பதிவு மையம் மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள், வக்கீல்கள் பயன்பாட்டிற்காக மையப்படுத்தப்பட்ட வழக்குப்பதிவு மையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், பொதுமக்கள் மற்றும் வக்கீல்கள் பயன்பாட்டிற்காக மையப்படுத்தப்பட்ட வழக்குப்பதிவு மையம் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி கலாவதி தலைமை தாங்கி மையப்படுத்தப்பட்ட வழக்குப்பதிவு மையத்தை தொடங்கி வைத்தார்.
மக்கள் நீதிமன்ற தலைவர் அறிவொளி, தலைமை குற்றவியல் நீதிபதி பாலசுப்பிரமணியன், கிருஷ்ணகிரி ஜே.எம். 1 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சுல்தான்அரிபீன் மற்றும் கிருஷ்ணகிரி வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் போது முதன்மை மாவட்ட நீதிபதி கலாவதி பேசியதாவது:-
இந்த மையப்படுத்தப்பட்ட வழக்குப்பதிவு மையம் பொதுமக்கள் மற்றும் வக்கீல்கள் பயன்பாட்டிற்கு வருகிற 2-ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இந்த மையத்தின் மூலம் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 12 நீதிமன்றங்களிலும் பதிவு செய்யப்பட வேண்டிய குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளை ஒரே இடத்தில் தாக்கல் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்திற்கும் வழக்கு எண் கணினி மூலம் எண்ணிடப்பட்டு, அந்த விவரம் மின்னஞ்சல் மூலமாகவும், குறுந்தகவல் மூலமாகவும் சம்பந்தப்பட்ட வக்கீல்கள் மற்றும் வழக்கு தாக்கல் செய்வதற்கு அவரவர் வழக்கு எந்தெந்த நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.