தஞ்சையில் வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை; 2 பேர் கைது ரூ.11 ஆயிரம் பறிமுதல்

தஞ்சையில், வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-12-27 23:15 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும், வெளி மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாகவும் புகார்கள் வந்ததையடுத்து தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து வல்லம், கும்பகோணம் பகுதியில் போலி மதுபானம் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள டாஸ்மாக்கடை அருகே ஒரு கடையில் மது பானங்கள் விற்பனை செய்யப் படுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த கடையை ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது அங்கிருந்த ஒரு கடையில் மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதிரடியாக அந்த கடைக்குள் நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 254 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மதுபானம் விற்பனை செய்த தொகை ரூ.11 ஆயிரத்து 60-ம் பறிமுதல் செய்யப் பட்டது.

இது தொடர்பாக தஞ்சை கரந்தை குதிரை கட்டித் தெருவை சேர்ந்த ராஜா மகன் ராகவேந்திரன்(வயது 25), திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தாலுகா குரும்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் குமார்(27) ஆகிய 2 பேரையும் பிடித்து தஞ்சை நகர கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகவேந்திரன் மற்றும் குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் இவர்களை தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்