நாகர்கோவிலில் பேனர்கள் வைத்தால் நடவடிக்கை அரசியல் கட்சியினருக்கு, நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
நாகர்கோவில் நகரில் பேனர்கள் வைத்தால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியல் கட்சியினருக்கு நகராட்சி ஆணையர் சரவணகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் நகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. நகர செயலாளர் ஜெயசந்திரன், தி.மு.க. நகர செயலாளர் மகேஷ் மற்றும் தே.மு.தி.க., ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆணையர் சரவணகுமார் பேசியபோது கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் வருகிற 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான டிஜிட்டல் பேனர்கள் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படுவதால் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் டிஜிட்டல் பேனர் வைக்க கோர்ட்டும் தடை விதித்து இருக்கிறது. எனவே தடையை மீறி பேனர்கள் வைத்தால் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பீச்ரோடு வலம்புரிவிளையில் 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் பயோ மெட்ரிக் முறையில் குப்பைகள் குறைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. குப்பைகள் குறைந்தவுடன் ஏற்படும் நிலத்தில் விளையாட்டு பூங்கா அமைக்கப்படும்.
நாகர்கோவில் நகரில் பழுதான சாலைகளை சரிசெய்ய ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்படும். நாகர்கோவில் நகராட்சிக்காக புதிதாக பேஸ்புக் (முகநூல்) கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து அரசியல் கட்சியினர் ஒன்றாக சேர்ந்து ஒரு கோரிக்கை வைத்த னர். அதாவது “நாகர்கோவில் நகராட்சி அலுவலகத்தில் மாதம் ஒரு முறை இதுபோன்ற அரசியல் கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்“ என்றனர். இதற்கு பதில் அளித்த ஆணையர் சரவணகுமார், “மாதத்தில் 3-வது அல்லது 4-வது புதன்கிழமை அன்று அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்“ என்றார்.