பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கியில் அதிகாரி ஆய்வு
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜா ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை ஏற்றிய சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரத்த வங்கிகளில் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதை தொடர்ந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் ரத்த வங்கியை இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜா ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 20 ஆண்டுகளாக ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள், கல்லூரி மாணவ-மாணவிகள் மூலம் ரத்தம் தானமாக பெறப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 3,500 யூனிட் ரத்தம் தானமாக பெறப்படுகிறது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 300 யூனிட் ரத்தம் சேமித்து வைக்கலாம். தானமாக பெறப்படும் ரத்தம் 3 கட்டமாக பரிசோதனை செய்யப்படும். அப்போது மஞ்சள் காமாலை, எச்.ஐ.வி., பால்வினை நோய், மலேரியா போன்ற நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த ரத்தம் பயன்படுத்துவதில்லை. அந்த ரத்தத்தை கிருமி நீக்கம் செய்து, மருத்துவ கழிவுகளுடன் அனுப்பி வைக்கப்படும். மேலும் ரத்தம் கொடுத்தவரை அழைத்து நோயின் தன்மை குறித்து தெரியப்படுத்தப்படும்.
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு ரத்தம் தானமாக கொடுத்த நபர்களின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் இந்த ஆண்டு 3 பேருக்கு மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு 2 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
18 வயது முதல் 60 வயது வரை உள்ள எல்லா ஆண்களும், பெண்களும் ரத்ததானம் செய்யலாம். கருவுற்றிருக்கும் போதும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் போதும் ரத்ததானம் செய்ய வேண்டாம்.
பெரிய அறுவை சிகிச்சை செய்த 6 மாதங்களுக்கும், சிறிய அறுவை சிகிச்சை செய்த 3 மாதங்களுக்குள் ரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும். மலேரியா சிகிச்சை பெற்ற பிறகு 3 மாதங்களுக்கும், மஞ்சள் காமாலை சிகிச்சை பெற்ற ஓராண்டு வரை ரத்ததானம் செய்யக்கூடாது. பால்வினை, எச்.ஐ.வி. நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்ததானம் செய்யக்கூடாது. பெண்கள் மாதவிடாய் நேரங்களிலும், சர்க்கரை நோய் உள்ளவர்களும் ரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஸ்டீராய்ட், ஹார்மோன் தொடர்பான மருந்துகள் சாப்பிடுவோர், போதை மருந்து உட்கொள்ளும் நபர்கள், பல்வேறு ஆண், பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருப்பவர்கள் மற்றும் பல்வேறு நோய் தடுப்பு ஊசிகள், மருந்துகள் எடுத்து கொள்வோரும் ரத்ததானம் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது ரத்த வங்கி டாக்டர் மஞ்சுளா, நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் மூசா, வெள்ளை நடராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.