போளூர் அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தும் கும்பலால் விபத்து பொதுமக்கள் சாலை மறியல்

போளூர் அருகே மோட்டார்சைக்கிளில் மணல் கடத்தும் கும்பலால் விபத்துகள் ஏற்படுகிறது என்று கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-27 22:15 GMT

போளூர், 

போளூரை அடுத்த கரைப்பூண்டி செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து தினமும் பலர் இருசக்கர வாகனத்தில் பைகளில் மணலை கடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை போளூர் அருகே உள்ள வெண்மணி கிராமத்தில் அந்த பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 45) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி கொண்டு வேகமாக வந்த நபர், தமிழ்செல்வன் மீது மோதினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதில் கீழே விழுந்த மோட்டார்சைக்கிளை அங்கேயே விட்டு, விட்டு அந்த நபர் தப்பியோடி விட்டார். விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வனை பொதுமக்கள் மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று மணல் கடத்தல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் சம்பவ இடத்தில் மணல் மூட்டையுடன் கிடந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்