நெல்லை அருகே பயங்கரம்: தாத்தா–பேரன் வெட்டிக்கொலை நடுரோட்டில் தீர்த்துக்கட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நெல்லை அருகே நடுரோட்டில் தாத்தா–பேரனை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வவைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-12-27 22:00 GMT

நெல்லை, 

நெல்லை அருகே நடுரோட்டில் தாத்தா–பேரனை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வவைவீசி தேடி வருகிறார்கள்.

ஜவுளி நிறுவன ஊழியர்

நெல்லை அருகே வல்லநாடு பக்கமுள்ள பக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா, விவசாயி. இவரது மகன் சுடலைமணி (வயது 18). சத்யா (21), கவிதா (17) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். சத்யாவுக்கு திருமணமாகி விட்டது. சுடலைமணி, நெல்லையில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் காலையில் சுடலைமணி வழக்கம்போல் பஸ்சில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் இரவில் வேலை முடிந்ததும், நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் பஸ்சில் பக்கப்பட்டிக்கு சென்றார்.

இரட்டைக் கொலை

சுடலைமணியை அழைத்து செல்வதற்காக, பக்கப்பட்டி விலக்கில் அவருடைய தாத்தா முத்துசாமி (65) காத்து நின்றார். அங்கு நாற்கர சாலையின் வடபுறம் முறப்பநாடும், தென்புறம் பக்கப்பட்டியும் உள்ளது. இரவு 11.30 மணியளவில் முறப்பநாடு பஸ் நிறுத்தத்தில் சுடலைமணி பஸ்சில் இருந்து இறங்கினார். பின்னர் அவர் நாற்கர சாலையை கடந்து, பக்கப்பட்டி விலக்கு அருகில் நடந்து சென்றார்.

அப்போது அங்கு இருளில் மறைந்து இருந்த மர்மநபர்கள் திடீரென்று ஓடிச்சென்று சுடலைமணியை நடுரோட்டில் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாலையோரம் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துசாமி கூச்சலிட்டவாறு மர்மநபர்களை தடுக்க முயன்றார். இதனால் முத்துசாமியையும் அவர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த முத்துசாமியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தப்பி ஓட்டம்

பின்னர் அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி ஓடி விட்டனர். நள்ளிரவில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, முறப்பநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராம், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இரட்டைக்கொலை நடந்த இடத்தில் மோப்ப நாய் மோப்பம் பிடித்து விட்டு நாற்கர சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

போலீஸ் குவிப்பு

கொலை செய்யப்பட்ட சுடலைமணி, முத்துசாமி ஆகிய 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களது உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. இந்த இரட்டைக் கொலை குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொலையான முத்துசாமி, தோட்ட காவலாளியாக பணியாற்றி வந்தார்.

பக்கப்பட்டியில் தாத்தா–பேரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நெல்லை அருகே தாத்தா–பேரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதல் விவகாரம் காரணமா?

பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை

கொலை செய்யப்பட்ட சுடலைமணி, நெல்லையில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார். இதற்கு முன்பாக அவர் இன்னொரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சுடலைமணி காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்