கொடிவேரி அணையில் மூழ்கி திருப்பூர் மாணவர் சாவு

கொடிவேரி அணையில் மூழ்கி திருப்பூர் மாணவர் இறந்தார்.

Update: 2018-12-26 22:15 GMT
டி.என்.பாளையம், 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரோடு பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஷேக்அப்துல்லா. ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் சதாத் (வயது 18). இவர் திருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் சதாத் தனது உறவினரான பிலால் (29) என்பவருடன் ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு மோட்டார்சைக்கிளில் வந்து உள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் அணை பகுதியை சுற்றி பார்த்தனர்.

இதைத்தொடர்ந்து அணையின் கீழ் பகுதியில் 2 பேரும் குளிக்க சென்றனர். ஏற்கனவே அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தனர். அவர்களுடன் 2 பேரும் சேர்ந்து குளித்தனர். சிறிது நேரம் கழித்து சதாத்தை பிலால் தேடினார். ஆனால் காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சதாத்தை தேடினார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே இருட்டிவிட்டது. மேலும் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருட்டிவிட்டதால் தேடும் பணியில் போலீசார் ஈடுபடவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் கொடிவேரி அணைக்கு வந்து சதாத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். 10 மணி அளவில் சதாத்தின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவருடைய உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் சதாத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘கூட்டத்தோடு கூட்டமாக குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற சதாத் தண்ணீரில் மூழ்கி இறந்தது,’ தெரிய வந்தது.

மேலும் செய்திகள்