கரூரில் இன்று நடக்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

கரூரில், செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் உள்பட மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா இன்று நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

Update: 2018-12-26 22:30 GMT

கரூர், 

அ.தி.மு.க.வில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த வி.செந்தில்பாலாஜி பின்னர் அ.ம.மு.க.வில் சேர்ந்தார். பின்னர், அதில் இருந்தும் விலகி சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க.வில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள், மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா, கரூர் ராயனூர் கலைவாணி நகரில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

விழாவில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதையொட்டி, நகரின் பல இடங்களில் தி.மு.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளன. மேலும், ராயனூர் பிரிவு ரோடு உள்ளிட்ட இடங்களில் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன.


விழாவில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் கோவையிலிருந்து காரில் இன்று காலை கரூர் வருகிறார். பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசும் அவர், மாலையில் நடக்கிற இணைப்பு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். விழாவிற்கு, மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலை வகிக்கிறார். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்தி பேசுகிறார்.

மேலும் செய்திகள்