மாற்று இடத்தில் அமைப்பதற்காக அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையை தூக்கிச்சென்ற பெண்கள்
மாற்று இடத்தில் அமைப்பதற்காக மறமடக்கி அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையை 200 அடி தூரத்திற்கு பெண்கள் தூக்கிச்சென்றனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே மறமடக்கி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் அரசு பொதுத்தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் சாதித்து வருகின்றனர். ஆனால் இந்த பள்ளிக்கு வகுப்பறைகள் போதுமானதாக இல்லை. இதனால் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்து வரும் நிலை உள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பள்ளிக்கு 10 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகம் உள்ளிட்டவை அடங்கிய ஒரே கட்டிடமாக கட்ட நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கிடையில் புதிய கட்டிடம் கட்ட பள்ளி வளாகத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 60 அடி நீள பழைய ஓட்டு கட்டிடம் இருந்தது. நல்ல நிலையில் இந்த கட்டிடத்தை அகற்றினால் மட்டுமே புதிய கட்டிடம் கட்ட முடியும் என்ற நிலை இருந்தது.
மேலும் ஓட்டு கட்டிடத்தின் மேற்கூரை நல்லநிலையில் இருந்ததால், அதனை உடைக்க மனம் இன்றி மாற்று ஏற்பாடு செய்ய கிராம மக்கள் முன்வந்தனர். அதன்படி ஓட்டு கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள ஓடுகளை மட்டும் பிரித்து 60 அடி நீளமுள்ள அதன் மரச்சட்டங்களை 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் உதவியுடன் தூக்கிச்சென்று, மற்றொரு இடத்தில் புதிய ஓட்டு கட்டிடத்தை அமைத்தனர். இந்த மரச்சட்டங்களை 200 அடி தூரத்திற்கு பெண்கள் தூக்கிச்சென்றதை தொடர்ந்து, அங்கு ஓட்டு கட்டிடம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மேற்கூரை அகற்றப்பட்ட பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இது குறித்து மறமடக்கி கிராம மக்கள் கூறுகையில், வகுப்பறைகள் பற்றாக்குறை இருப்பதால் கூடுதல் வகுப்பறை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கட்டிடம் கட்டும் காலத்தில் மாணவர்கள் படிக்க வகுப்பறை இல்லாமல் போகும் என்பதால் பழைய ஓட்டு கட்டிட மேற்கூரையை உடைக்காமல் அப்படியே தூக்கி மாற்று இடத்தில் அமைத்து விட்டோம். இங்கு 2 அல்லது 3 வகுப்பறைகள் நடத்தலாம். புதிய கட்டிடம் கட்டி திறக்கப்படும் வரை இந்த தற்காலிக ஓட்டு கட்டிடத்தில் வகுப்புகள் செயல்படும், என்றனர்.