சாத்தூர் கர்ப்பிணிக்கு செலுத்திய எச்.ஐ.வி. ரத்தத்தை தானமாக வழங்கிய வாலிபர் தற்கொலை முயற்சி - ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதி

கர்ப்பிணிக்கு அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கலந்த ரத்தம் ஏற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த ரத்தத்தை தானமாக கொடுத்த வாலிபர் தற்கொலைக்கு முயன்று ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2018-12-26 22:15 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரின் உறவினர் பெண், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தம் தேவைப்பட்ட நிலையில், அந்த வாலிபர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ரத்ததானம் வழங்கியுள்ளார். இது ‘ஓ பாசிட்டிவ்‘ வகை ரத்தம் என கூறப்படுகிறது.

ஆனால், அந்த ரத்தம் அவருடைய உறவினர் பெண்ணுக்கு ஏற்றப்படவில்லை. ரத்த வங்கியில் இருந்து கைமாறி சென்ற அந்த ரத்தம்தான் சாத்தூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, 9 மாத கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது.

9-ம் வகுப்பு வரை படித்துள்ள அந்த வாலிபர், சிவகாசி பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொண்டார். அதற்காக அந்த வாலிபர் மதுரையில் தனியார் நிறுவனம் மூலம் உடல்-ரத்த பரிசோதனை செய்துகொண்டார். அப்போது, அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததை அறிந்துள்ளார்.

பின்னர் அவர் சிவகாசி ரத்த வங்கிக்கு சென்று தன்னிடம் எடுக்கப்பட்ட ரத்தத்தை வேறு யாருக்கும் செலுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். அதற்குள் அந்த ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தானமாக கொடுத்த ரத்தத்தை ஏற்றியதால் அந்த கர்ப்பிணி எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அறிந்ததும் அந்த வாலிபர் விரக்தி அடைந்தார். நேற்று வீட்டில் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு போராடிய அவரை கமுதி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அந்த வாலிபரின் பெற்றோர், “அப்பாவி கர்ப்பிணி பெண்ணின் உயிரை காப்பாற்ற முயன்ற எனது மகனின் நல்ல எண்ணத்தினை பாராட்டக்கூட வேண்டாம். அவனை அசிங்கப்படுத்தி மீதம் உள்ள வாழ்நாளை கூட நிம்மதியாக கழிக்கவிடாமல் தற்கொலை முயற்சிக்கு இந்த சமூகம் தள்ளிவிட்டது” என்று கூறி கண்ணீர் விட்டது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்