1–ந்தேதி முதல் தடை அமல்: பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் கலெக்டர் ஷில்பா வேண்டுகோள்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு வருகிற 1–ந்தேதி முதல் தடை விதிக்கப்படுவதால், பொதுமக்கள் மாற்றுப்பொருட்களை பயன்படுத்தும்படி நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லை,
பிளாஸ்டிக் பொருட்களுக்கு வருகிற 1–ந்தேதி முதல் தடை விதிக்கப்படுவதால், பொதுமக்கள் மாற்றுப்பொருட்களை பயன்படுத்தும்படி நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆய்வு கூட்டம்
தமிழகத்தில் ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு வருகிற 1–ந்தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. இதையொட்டி, நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், போலீஸ், சுகாதாரம், உணவு பாதுகாப்பு துறைகள், மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்து, யூனியன் அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களின் ஆய்வு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்து.
கூட்டத்துக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசியதாவது:–
14 வகையான பொருட்கள்
தமிழக அரசு வருகிற 1–ந்தேதி முதல் உணவு பொருட்களுக்கு உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தெர்மக்கோல் தட்டுகள், தெர்மக்கோல் கப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித கப்புகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், பிளாஸ்டிக் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் நெய்யாத பிளாஸ்டிக்கால் ஆன எடுத்து செல்லும் பைகள் ஆகிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்து, யூனியன் அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் ஒரு போலீஸ் அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர், சுகாதாரத்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அபராதம்
இன்று (வியாழக்கிழமை) முதல் அந்தந்த பகுதிகளில் உள்ள வணிகர்கள், சிறு வியாபாரிகள், ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுடன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக கூட்டம் நடைபெற உள்ளது. மேலும், 1–ந்தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால், உடனடியாக பறிமுதல் செய்து, சிறு வியாபாரிகளுக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரையும், பெரிய வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள், வியாபாரிகள் பயன்படுத்தாமல் மாற்றுப்பொருட்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஷில்பா பேசினார்.
இந்த கூட்டத்தில், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணநாயர் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.