யவத்மால் அருகே பயங்கர விபத்து லாரி-ஜீப் நேருக்கு நேர் மோதல்; 11 பேர் பலி

யவத்மால் அருகே லாரி-ஜீப் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 11 பேர் பலியானார்கள். 8 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2018-12-26 00:08 GMT
மும்பை,

யவத்மால் மாவட்டம் உமர்சாரா பகுதியில் நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் யவத்மாலில் உள்ள கலம்ப் தாலுகா பார்டி, சாபர்டா கிராமங்களை சேர்ந்த மக்கள் சிலர் கலந்து கொண்டனர்.

இவர்கள் நிகழ்ச்சி முடிந்து இரவு நேரத்தில் ஜீப்பில் ஊருக்கு திரும்பினர். ஒரே ஜீப்பில் 20-க்கும் மேற்பட்டவர்கள் நெருக்கிபிடித்தபடி உட்கார்ந்து இருந்து உள்ளனர். ஜீப் யவத்மால் - கலம்ப் ரோட்டில் சாபர்டா அருகே வந்து கொண்டு இருந் தது. அப்போது அந்த வழியாக கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும், ஜீப்பும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜீப் அப்பளம் போல நொறுங்கியது. அதில் சிக்கியவர்கள் ரத்த வெள்ளத்தில் அபய குரல் எழுப்பினர்.

தகவல் அறிந்து அந்த பகுதி போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் ஜீப்பில் சிக்கியிருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டதாக டாக்டர்கள் கூறினர். மேலும் படுகாயமடைந்த 12 பேரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 8 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜீப்பில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியது மற்றும் அதிக வேகமே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

எனினும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்