பவானியில் ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்தது
பவானியில் ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்தது.
பவானி,
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து கிரானைட் கல் பாரம் ஏற்றிய லாரி சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை மைசூர் காமராஜ் நகரை சேர்ந்த ரியாஸ் என்பவர் ஓட்டினார். இந்த லாரி நேற்று அதிகாலை 3 மணி அளவில் பவானி அந்தியூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் (டிவைடர்) மீது லாரியின் டீசல் டேங்க் மோதியது. இதில் டீசல் டேங்க் உடைந்ததுடன், திடீரென லாரி தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
இதை கண்டதும் லாரியில் இருந்து டிரைவர் ரியாஸ் குதித்து உயிர் தப்பினார் உடனே அங்கிருந்தவர்கள் இதுபற்றி பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் லாரி முழுவதும் எரிந்து நாசம் ஆனது.
இதைத்தொடர்ந்து தீப்பிடித்து எரிந்து நாசம் ஆன லாரியில் இருந்து கிரானைட் கற்கள் அகற்றப்பட்டன. மேலும் கிரேன் மூலம் லாரியை மீட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.