மணல் கடத்தலை தடுக்கச் சென்ற துணை தாசில்தார் ஜீப் மீது கல்வீசிய டிரைவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு

மணல் கடத்தலை தடுக்கச் சென்ற துணை தாசில்தார் ஜீப் மீது கல்வீசி தாக்கிய மினி வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-12-25 23:31 GMT
புதுச்சேரி,

வில்லியனூர் துணை தாசில்தார் நித்தியானந்தம் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் ஒரு ஜீப்பில் வில்லியனூரை அடுத்த சேந்தநத்தம் சங்கராபரணி ஆற்றுப் பகுதியில் மணல் கடத்தலை தடுப்பதற்காக கண்காணிப்பு பணிக்கு சென்றனர். அப்போது ஆற்றில் மணல் அள்ளும் கும்பல் அங்கு வைத்திருந்த மிதவையை பறிமுதல் செய்தனர்.

பின்னர் சேந்தநத்தம் வழியாக ஆரியபாளையம் பகுதி சங்கராபரணி ஆற்றுக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு கும்பல் ஜீப் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் ஜீப்பின் பின்பக்க விளக்கின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இது குறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் துணை தாசில்தாரின் ஜீப்மீது கல்வீசி தாக்கியது ஆரியபாளையத்தை சேர்ந்த மினி வேன் டிரைவர் ஆதிமூலம் (வயது 36) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மேல் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்