கர்நாடகத்தில் பரபரப்பு விழா மேடையில் பா.ஜனதா எம்.பி.க்கள் வாக்குவாதம்

விழா மேடையில் பா.ஜனதா எம்.பி.க்கள் 2 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-12-25 23:06 GMT
பெலகாவி,

பெலகாவியில் ரெயில்வே மேம்பாலம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் புதிய மந்திரி சதீஸ் ஜார்கிகோளி, எம்.பி.க்கள் சுரேஷ் அங்கடி, பிரபாகர் கோரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் சுரேஷ் அங்கடி, பெலகாவி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிரபாகர் கோரே, மாநிலங்களவை எம்.பி. இவர்கள் இருவரும் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள்.

விழாவில், பிரபாகர் கோரே எழுந்து, “நான் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறேன். இந்த விழா அழைப்பிதழில் எனது பெயரை அச்சிடவில்லை. இது சரியல்ல” என்று கூறி சுரேஷ் அங்கடிக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதற்கு சுரேஷ் அங்கடி எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சுரேஷ் அங்கடி, பிரபாகர் கோரேவை பார்த்து, “உங்களுக்கு கொஞ்சமாவது ‘பொது அறிவு’ இருக்கிறதா?” என்று கேட்டார்.

அதனால் கோபம் அடைந்த பிரபாகர் கோரே, “நீங்கள் இங்கு ரவுடியை போல் செயல்பட வந்துள்ளீர்களா?” என்றார். இவ்வாறு இருவருக்கும் இடையே சிறிது நேரம் சூடான வாக்குவாதம் நடைபெற்றது.

இதனை மந்திரி சதீஸ் ஜார்கிகோளி மற்றும் ரெயில்வேத்துறை அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் வேடிக்கை பார்த்தப்படி இருந்தனர். பா.ஜனதாவை சேர்ந்த 2 எம்.பி.க்கள் விழா மேடையில் சண்டை போட்ட விவகாரம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்