அனைவருக்கும் நிவாரணம் கேட்டு 5 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-25 23:01 GMT
விராலிமலை,

விராலிமலை தாலுகாவில் கஜா புயல் தாக்கியதில் சேதமடைந்த வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் தேராவூர் ஊராட்சி அன்னாவி கவுண்டம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கூறி கொடும்பாளூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் பாண்டி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் தமிழக அரசின் சார்பில் நிவாரண பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது. அப்போது, மழையூரில் உள்ள அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் எனக்கூறி புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மழையூர் வருவாய் ஆய்வாளர் சசிக்குமார், மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டாயுதபாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கந்தர்வகோட்டை அருகே உள்ள பழையகந்தர்வகோட்டை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் பழைய கந்தர்வகோட்டை பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கந்தர்வகோட்டை துணை தாசில்தார் ராமசாமி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அறந்தாங்கி அருகே உள்ள திருநாளூர் வடக்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதேபோல அறந்தாங்கி அருகே உள்ள சிட்டங்காடு, பரவாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்