உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2018-12-25 23:30 GMT
திருவண்ணாமலை,

விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17-ந் தேதி முதல் திருவண்ணாமலை அருகே உள்ள தென்அரசம்பட்டு கிராமத்தில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தூக்கு கயிற்றை கழுத்தில் போட்டும், வாயில் கருப்பு துணி கட்டியும், அரை நிர்வாணம் என பல்வேறு வகையான போராட்டங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 9-ம் நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் கடந்த 23-ந் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் கீழ்பென்னாத்தூர் அருகே கந்தபாளையத்தை சேர்ந்த வெங்கடேசன், குண்ணமுறிஞ்சையை சேர்ந்த சதீஷ்குமார், பன்னீர்செல்வம், வீரளூர் ஏகாம்பரம், வட மாதிமங்கலம் சண்முகம் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.

நேற்று 3-வது நாளாக இவர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரில் ஏகாம்பரத்திற்கும், சதீஷ்குமாருக்கும் திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற 3 பேரும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்