அருப்புக்கோட்டை அருகே பயங்கரம்: சமரசம் பேச சென்ற போது மாமனார்-மாமியார் ஓட, ஓட விரட்டிக் கொலை

சமரசம் பேச வந்த மாமனார், மாமியாரை ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொன்ற பயங்கரம் நடந்துள்ளது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் போலீசிடம் சிக்கினார். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-12-25 22:15 GMT
நரிக்குடி,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வீரசோழனை அடுத்துள்ள கீழசிம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. அவருடைய மகன் கணேசனும் (வயது 31), வீரசோழனை சேர்ந்த செந்தில்வேல் மகள் முனீஸ்வரியும் (25) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

கணேசன்-முனீஸ்வரி தம்பதியினர் விறகுகளை வெட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் கணேசனுக்கும், கீழசிம்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும், செல்போனில் பேசியும் வந்துள்ளனர்.

இவர்களின் கள்ளத்தொடர்பு விவரம் முனீஸ்வரிக்கு தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இருப்பினும் கணேசனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையேயான கள்ளத்தொடர்பு நீடித்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 21-ந் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனது உறவினர் வீட்டுக்கு மனைவியுடன் கணேசன் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் வீரசோழன் வந்தனர்.

அப்போது மனைவி முனீஸ்வரியை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்ட கணேசன், உன்னுடன் இனி சேர்ந்து வாழ முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த முனீஸ்வரி தனது நிலைமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து கணேசனை சமரசம் செய்து முனீஸ்வரிடன் சேர்த்து வைக்க அவருடைய தந்தை செந்தில்வேல், தாய் வனிதா ஆகியோர் முடிவு செய்தனர். இதற்காக இருவரும் நேற்று முன்தினம் இரவில் கீழசிம்பூரில் உள்ள தனது மருமகன் வீட்டிற்கு சென்று கணேசனின் தந்தை பாண்டியை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கணேசன் மற்றும் அவரது தந்தை பாண்டி ஆகியோர் சேர்ந்து செந்தில்வேலையும், வனிதாவையும் சரமாரியாக தாக்கியதாக தெரியவருகிறது. இதனால் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத தந்தை, மகனும் ஓட, ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டியதாகவும் தெரியவருகிறது. இதில் செந்தில்வேல் கை, கால் துண்டித்த நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். வனிதாவையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் கணேசனும், அவருடைய தந்தையும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வீரசோழன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்தநிலையில் தப்பியோடிய கணேசன், ரத்தக்கறை படிந்த சட்டையுடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் மாமனார், மாமியாரை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

போலீசில் சிக்கிய அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நேற்று மாலையில் கணேசனின் தந்தை பாண்டி முதுகுளத்தூர் போலீசில் சரண் அடைந்தார்.

மருமகனுடன் சமரசம் பேசச் சென்ற தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்