சிங்கம்புணரி பகுதியில் கொள்ளை சம்பவங்களை தடுக்க வலியுறுத்தல்
சிங்கம்புணரி பகுதியில் அடிக்கடி தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி வளந்து வரும் நகரங்களில் ஒன்றாக மாறி வருகிறது. மேலும் தற்போது தனித்தாலுகா அந்தஸ்து பெற்றுள்ளது. இந்தநிலையில் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ள பகுதியான நியூ காலனி பகுதியில் உள்ள விநாயகர் கோவில் உண்டியல் மற்றும் முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் வீடு, முன்னாள் வங்கி ஊழியர் வீடு என அடுத்தடுத்தது தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.
இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் தங்களின் வீடுகளிலும் கொள்ளையர்கள் புகுந்து விடுவார்களோ என்று அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் மற்றும் வீடுகள் நெருக்கம் கொண்ட எங்கள் நியூ காலனி பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.
இதனால் எங்கள் பகுதி பொதுமக்கள் உடமைகளையும், தங்களையும் பாதுகாக்க போலீசார் தினமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
குறிப்பாக கீழக்காட்டு சாலை, நியூ காலனி மற்றும் கூத்தாடி அம்மன் கோவில் சாலை போன்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட வேண்டும் என்றார். இதையடுத்து இந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.