மொபட்டில் சென்ற போது ஜீப் மோதி 2 தொழிலாளர்கள் பலி
கோவையில் மொபட்டில் சென்ற போது ஜீப் மோதி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை இருகூரை சேர்ந்தவர் அழகிரி (வயது53). பீடம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (44). கட்டிட தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக மொபட்டில் அவினாசி ரோடு சின்னியம்பாளையத்தை அடுத்த, தொட்டிப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது எதிரே வந்த ஜீப் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் அழகிரி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சக்திவேலை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்குப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விபத்தில் இறந்த தொழிலாளர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையில், விபத்துக்கு காரணமான ஜீப்பை கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த அருண் (27) என்பவர் ஓட்டி வந்ததும், அவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அருண் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.